இந்த ஆண்டின் டாப் ஹீரோ?

ஒவ்வொரு வருடமும் ஒரு ஹீரோ அந்த ஆண்டின் வசூல் சக்கரவர்த்தியாகவும், ரசிகர்களின் ஆதர்ச நாயகனாகவும் இருப்பார். கடந்த 2011ஆம் ஆண்டு ‘கோ’ படத்தின் மாபெரும் வெற்றியால் ஜீவாவும், 2012ஆம் ஆண்டு சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்த ‘துப்பாக்கி’ நாயகன் விஜய்யும் ‘டாப் ஹீரோ’வாக ஜொலித்தார்கள். இந்த ஆண்டு கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஆர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு படங்கள் வெளிவந்தன. இவர்களில் இந்த வருட ‘டாப் ஹீரோ’ என்றால் அது சந்தேகமே இல்லாமல் சூர்யாதான்.

ஏ, பி, சி என மூன்று சென்டர்களிலும் வசூலில் சாதனை புரிந்த ‘சிங்கம் 2’ படத்தின் மூலம் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் சூர்யா. ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க 2010ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்தபோதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு இருந்தது. அதோடு இப்படம்தான் தமிழின் முதல் தொடர்ச்சிப் படம் என்றும் சொல்லலாம்.

முதல் பாகத்தில் எப்படி இருந்தாரோ அதே இளமைத் துள்ளலுடன், கம்பீர மீசையுடன் மூன்று வருடங்கள் கழித்தும் சூர்யா இப்படத்தில் தோன்றியிருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. பஞ்ச் டயலாக்குகளை தவிர்த்து, கதைக்குத் தேவையான வசனங்களை சூர்யா கர்ஜித்தபோது மொத்த தியேட்டரும் அதிர்ந்தது. அதோடு சண்டை, நடனம், காமெடி, ரொமான்ஸ் என எல்லா ஏரியாக்களிலும் இப்படத்தில் கலக்கியிருந்தார் சூர்யா. ஹரியின் அதிவேக திரைக்கதை, கச்சிதமான ஒளிப்பதிவு, பரபரப்பான எடிட்டிங் என எல்லா விஷயங்களும் கைகொடுக்க இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப் படமாக ‘சிங்கம் 2’ அமைய இந்த வருடத்தின் ‘டாப் ஹீரோ’வாக ஜொலித்தார் சூர்யா.

Share |
Previous Page Next Page HOME