சத்தியமாக நான் துரோகி கிடையாது: கத்தி விழாவில் விஜய் பேச்சு

நான் தியாகியும் அல்ல, துரோகியும் அல்ல என்று கத்தி பட விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்–சமந்தா நடித்து கத்தி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்றிரவு நடந்தது.  அந்த சின்ன ஹாலுக்குள் ஆயிரக்கணக்கானவர்கள் நிற்க, அழைப்பிதழ் இருந்தும் பாதி பேர் ஓட்டலுக்கு வெளியே அல்லாடிக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்த்ததுபோல் மாலை நான்கு மணியிலிருந்தே ஓட்டலுக்கு வெளியே தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவிட்டது வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சியும் பிற தமிழ் அமைப்புகளும்.


விழாவில் முருகதாஸ் பேசும்போது மிகவும் உணர்ச்சி மிகுந்தே காணப்பட்டார். அவர் பேசியபோது, நான் என்னைக்குமே பணத்தை பெரிசா நினைக்கிறவன் இல்ல. சென்னையிலிருக்கிற ஒருத்தன், சென்னைன்னு கூட சொல்ல முடியாது. அதையும் தாண்டி 200 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கிராமத்திலிருந்த ஒருத்தன், சரியா இங்கிலீஷ் பேச கூட தெரியாதவன் இங்க வந்து கொடி நாட்டுவதா என்று பாலிவுட்டில் பேசினார்கள். அந்த ஒரு காரணத்திற்காகதான் நான் இந்திக்கு படம் எடுக்க போனனே ஒழிய நிறைய பணம் வரும் என்பதற்காக அல்ல. எனக்கு தமிழ் படங்களை எடுப்பதுதான் பிடிக்கும். எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. எனக்கும் தமிழ் ரத்தம்தான் ஒடுகிறது. நானும் சுத்த்த தமிழன்தான். பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் நான் நல்ல நட்பில்தான் இருக்கிறேன். ரிலையன்ஸ் நிறுவனமும் எனக்கு அப்படிதான். நானும் சரி, விஜய் சாரும் சரி. எப்பவுமே பணத்தில் பின்னால் ஓடுறவங்க இல்ல.

கத்தி படத்தின் தொடர் வேலைகள் காரணமா இருந்ததால் போன வாரம் எனக்கு திடீர்னு உடல் நலக்குறைவு ஏற்பட்டுச்சு. ஆம்புலன்ஸ் கிராஸ் ஆகும்போது பார்த்துருக்கேன். அதே ஆம்புலன்சில் நான் போவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்ல. நான் மயங்கி விழுந்ததும் என்னை ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போனவர் விஜய்சார்தான். நான் மயங்கி கிடந்த நிலையில் டாக்டர் என்னை தட்டி, அவர் யார் தெரியுதா என்று கேட்டார். நான் பார்த்த திசையில் விஜய்தான் இருந்தார். அவரை தெரியலேன்னு நான் சொன்னேன்னா என் மகன் கூட என்னை அடிக்க வருவான் என்றார் முருகதாஸ்.

விழாவில், நடிகர் விஜய், மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:–

நான் பொதுவாக என் படங்களை பற்றி பெரிதாக சொல்லி பழக்கமில்லை. எனக்கும், டைரக்டர் முருகதாசுக்கும் ‘கத்தி’ வாழ்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறோம். கத்தி படம் எடுத்தது சண்டை போடுவதற்காக அல்ல. எல்லா தரப்பு மக்களும் சண்டை–சச்சரவுகளை மறந்து நிம்மதியாக–சந்தோஷமாக படத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காக தான்.எந்த மக்களுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்த படத்தை எடுக்கவில்லை. என்னை நான் தியாகி என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனால் சத்தியமாக நான் துரோகி கிடையாது. உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் தெளிவாகிவிடும். வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் உண்மையாகிவிடும். இது தமிழ்நாடு. நான் தமிழன் என்று பேசினார்.


விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், செயலாளர் ஞானவேல்ராஜா, நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி, நடிகர்கள் ஆர்யா, சிபிராஜ், சதீஷ், நடிகை சமந்தா, டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், தரணி, வசந்த பாலன், பேரரசு, பீரவின்காந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிரூத், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பட தொகுப்பாளர் அரிஹர பிரசாத், நடன அமைப்பாளர் ஷோபி, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், ‘கத்தி’ பட தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரண், கருணாமூர்த்தி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tag: vijay,kaththi news,kaththi audio function,murugadoss speech in kaththi audio release funtion,

Share |
Previous Page Next Page HOME