சின்ன வயதிலேயே தாயை இழந்த ஜீவா, தந்தை இருந்தாலும் பக்கத்து வீட்டில் தான் வளர்கிறான். சிறுவர்களுடன் சேர்ந்து லோக்கலாக கிரிக்கெட் விளையாடும் சிறுவன் ஜீவா, மிகவும் நன்றாக விளையாடுவதால் பள்ளி கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்து விடுகிறது.
பள்ளி கிரிக்கெட் அணியில் ஜீவாவின் திறமையைப் பார்த்த பீனிக்ஸ் கிளப்பின் கோச், அவனை தங்களது கிளப்பில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், அவனது அப்பா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகமானதால் படிப்பில் கோட்டை விடுகிறார். பக்கத்து வீட்டுக்காரர் சார்லி ஜீவாவின் தந்தையிடம் ஜீவாவின் கிரிக்கெட் திறமையை பற்றி எடுத்து சொல்லி சமாதானப்படுத்துகிறார்.
இந்நிலையில் பக்கத்துக்கு வீட்டுக்கு குடி வரும் ஜெனியும், ஜீவாவும் காதலிக்கிறார்கள். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜெனியின் அப்பாவுக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் ஜெனியை படிப்பிற்காக வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார். அந்த நேரத்தில் குடிக்க ஆரம்பிக்கும் ஜீவாவை, அதை மறக்க வைத்து குடியிலிருந்து மீட்க கிரிக்கெட் கிளப்பில் சேர்த்து விடுகிறார்கள். அங்கு நண்பர்களாகிறார்கள் லக்ஷ்மனும், சூரியும். நன்றாக விளையாடியும் ஜீவாவும், லக்ஷ்மனுக்கும் ரஞ்சி செலக்ஷனில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், மனமுடைந்த லக்ஷ்மன் தற்கொலை செய்து கொள்கிறார்.
இதற்கிடையில் ஜீவா ஒருவழியாக ஜெனி எங்கு படிக்கிறார் என்பதை கண்டுபிடித்து இருவரும் மீண்டும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் சம்மதம் கேட்கிறார்கள். ஜெனியின் அப்பாவோ கிரிக்கெட்டை விட்டு வந்தால் அவளை திருமணம் செய்து கொடுப்பதாக கூறுகிறார்.
தன் நண்பனின் தற்கொலை மரணம் ஜீவாவை எந்த அளவு பாதித்தது? ஜீவா கிரிக்கெட்டில் சாதித்தாரா? ஜெனியுடனான காதல் என்ன ஆனது? என்பதை மிகவும் அழுத்தமாகவும், கிரிக்கெட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளையும் சரியாக கூறியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
ஜீவா பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஷ்ணு. நிஜமான கிரிக்கெட் வீரர் என்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதற்காக ஸ்கூல் சிறுவனாக காட்டுவதற்காக மீசையில்லாமல் காட்டியிருப்பதைத்தான் காமெடியாக தெரிகிறது. ஜெனியாக வரும் ஸ்ரீதிவ்யா படம் முழுக்க அழகாக வந்து போகிறார். பள்ளி மாணவியாக, பொறுப்புகளை உணர்ந்த கல்லூரி மாணவியாக அற்புதமாக நடித்துள்ளார். காதல் காட்சிகளில் இனிமை.
படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் லக்ஷ்மன், நல்ல நடிப்பு. வாய்ப்பை நன்றாக உபயோகப்படுத்தியுள்ளார். காதல் தோல்வி, கிரிக்கெட் வாழ்க்கையில் தோல்வி போன்ற காட்சிகளில் சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சூரியின் காமெடி இந்த படத்தில் எடுபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஹீரோவின் அப்பாவாக மாரிமுத்து, சார்லி, கோச் ரவி, தயாரிப்பாளர் டி.சிவா, மதுசூதனன் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளார். மதியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகளில் இருந்து கடைசியில் வரும் கிரிக்கெட் போட்டி காட்சிகள் வரை அற்புதமாக படம் பிடித்துள்ளார்.
படத்தின் முக்கியமான பலம் டி.இமானின் இசை. அனைத்து பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்தோடு ஒன்ற வைக்கிறது.
வெண்ணிலா கபடிக் குழு மூலம் ரசிகர்களின் மனதை தொட்ட சுசீந்திரன் இந்த படத்தில் கிரிகெட் என்ற ஆயுதத்தை எடுத்து அதையும் அருமையாக கூறியுள்ளார். கிரிக்கெட்டின் பின்னணியில் எவ்வளவு திறமையாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், எவ்வளவு பேரின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன என்பதை மட்டுமின்றி கிரிக்கெட்டின் பின்னணியில் நடைபெறும் அரசியலை மிகவும் தைரியமாக கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் ஜீவா வென்றான்
![]()




