தயாரிப்பாளர் சங்கமா? விஜய் கால்ஷிட்டுக்காக காத்திருக்கும் சங்கமா..? - கேயார் ஆவேசம்.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் முடங்கிக்கிடக்கின்றன. இதன் தயாரிப்பு மதிப்பு மட்டுமே 1,000 கோடி ரூபாய்க்கும் மேல். இதில் சரிபாதி படங்கள் வெளிவர வாய்ப்பே இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இந்த நிலையில்தான் செப்டம்பர் 7-ல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்க உள்ளது. தலைமை ஏற்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

கேயார் ஒரு அணியாகவும் தாணு மற்றொரு அணியாகவும் மல்லுக்கட்டுகின்றனர்.

முதலில் கேயாரைச் சந்தித்தோம். ''தாணு தலைமையிலான அணியை இயக்குவதே எஸ்.ஏ.சந்திரசேகரன்தான். அதை தாணு அணி என்பதைவிட விஜய் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் அணி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். தலைவர் பதவி வேட்பாளர் தாணு, விஜய்யை வைத்து 'சச்சின்’, 'துப்பாக்கி’ படங்களைத் தயாரித்தவர். மேலும் விஜய் கால்ஷீட் கேட்டு அட்வான்ஸ் கொடுத்துள்ளார். செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் சங்கிலி முருகன், 'சுறா’ தயாரிப்பாளர்.

துணைத் தலைவர் வேட்பாளர் புஷ்பா கந்தசாமி 'திருமலை’ தயாரிப்பாளர். பொருளாளர் வேட்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் 'தலைவா’ தயாரித்து நஷ்டப்பட்டவர். மற்றொரு துணைத் தலைவர் வேட்பாளர் கதிரேசன், விஜய் கால்ஷீட்டுக்காகக் காத்திருப்பவர். எஸ்.ஏ.சி. தன் சுயநலத்துக்காக இப்படி ஓர் அணியைக் கட்டமைத்திருக்கிறார்.

எஸ்.ஏ.சி. தலைமையில் இயங்கிய தயாரிப்பாளர் சங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி நீதிபதி முன்பு வாக்கெடுப்பு நடத்தினோம். அதில் அவருக்கு ஆதரவாக வெறும் 10 வாக்குகளே கிடைத்தன. எதிர்த்து விழுந்தவை 204. காரணம், அவர் அணியின் செயல்பாடு அப்படி. தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை தொடர்பாக ஃபெப்சி ஸ்டிரைக் அறிவித்தபோது, ஊர் முழுக்க படப்பிடிப்பை நிறுத்தச்சொல்லி சங்கத்தில் இருந்து அறிவுறுத்தினார்கள். 'யாருடா மகேஷ்’ படத்தின் தயாரிப்பாளர், ' மூன்று நாட்கள்தான் படப்பிடிப்பு பாக்கியுள்ளது. முடித்துவிடுகிறேனே’ என்றார். 'கூடவே கூடாது, பிறகு எதுக்கு சங்கம்?’ என கடுப்பு காட்டினார் எஸ்.ஏ.சி. இதனால், அந்தத் தயாரிப்பாளருக்கு வட்டி கொடுத்த வகையில் 35 லட்சம் நஷ்டம். இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் விஜய் நடித்த 'துப்பாக்கி’ பட ஷூட்டிங் சத்தமில்லாமல் 35 நாட்கள் மும்பையில் அங்குள்ள தொழிலாளர்கள் உதவியோடு நடந்து முடிந்தது. இதுதான் நடுநிலையா?

எஸ்.ஏ.சி. தலைவராகப் பதவியேற்ற புதிதில், 'இந்த ஒரு வருஷம் மட்டும் என்னை ஃப்ரீயா விடுங்க. அடுத்த நாலு வருஷத்துல என் பையனோட எதிர்காலம், அரசியல்ல அவனைத் தயார் பண்றதுல கவனம் செலுத்தப்போறேன்’னு சொன்னவர், தொடர்ச்சியா ஒரு வாரம்கூட சங்க வேலைகளைப் பார்க்கவில்லை.

கவுன்சில்ல உள்ள ஏழு கோடி பணத்தை எடுத்து உறுப்பினர்களுக்கு ஆளுக்கு அரை கிரவுண்டு நிலம் வாங்கித் தர்றேன்னு சொன்னார். சொசைட்டி ஆக்ட் பிரிவு 35-ன்படி அது சட்டப்படி குற்றம்னு நிதிமன்றமே சொல்லிடுச்சு. இவங்களால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம். கடந்த நாலஞ்சு வருஷத்துல மானியம் தரவேண்டி நிலுவையில் உள்ள 450 சிறு முதலீட்டு படங்கள் கிடப்பில் கிடக்குது. அவங்களுக்கு மானியம் தர்றதுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கலை.

முன் அனுபவம் இல்லாம படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறாங்க. இப்படிப் பார்த்தால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சராசரியா 15 கோடி ரூபாய் நஷ்டமாகுது. இந்த அறிமுக தயாரிப்பாளர்களுக்கு கவுன்சிலிங், பயிற்சி முகாம் மாதிரியான எந்த நல்ல நடவடிக்கையும் நடந்ததா தெரியலை.

'துப்பாக்கி’க்கு முன் விஜய் நடிச்ச படங்கள் வரிசையா தோல்வியை சந்திச்சப்ப... விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர் சங்கம் காம்பன்சேஷன் கேட்டு அவருக்கு 'ரெட் கார்ட்’ போட்டுச்சு. அந்தத் தடை எப்ப வேணும்னாலும் உயிர்பெற்று தன்னை நெருக்கலாம்கிற பயத்துலதான் தாணு அணியை எஸ்.ஏ.சி. களமிறக்கியிருக்கார்'' என்றார்.

கேயாரின் குற்றச்சாட்டுகளுக்கு தாணு என்ன பதில் சொல்கிறார்? ''கேயார் படம் எடுத்து ஐந்து வருஷம் ஆகுது. ஆனால், எப்படியாவது கவுன்சில்ல தலைவரா வந்து உட்கார்ந்திடணும்னு போராடுறார். அதற்காக சமீபத்தில் ஒரு டப்பிங் படத்தின் ரைட்ஸ் வாங்கி, அது நேரடித் தமிழ்ப் படம்னு சென்சார் போர்டுல உள்ள சத்யஜோதி தியாகராஜன், கமீலா நாசர், கே.ராஜன், எடிட்டர் மோகன், சித்ரா லட்சுமணன்னு அவரோட ஆட்கள் உதவியோட சர்டிஃபிகேட் வாங்கினார்.

சமீபத்தில் சங்க உறுப்பினர்கள் 160 பேருக்கு தலா 5,000 ரூபாய் எங்க கைகாசு போட்டுக் கொடுத்தோம். எஸ்.ஏ.சி. 2.5 லட்சம், நான் 2.5 லட்சம், தேனப்பன் 50 ஆயிரம், மாதேஷ் 50 ஆயிரம், கதிரேசன் 50 ஆயிரம், சந்திர பிரகாஷ் ஜெயின் 1.5 லட்சம்னு மொத்தம் எட்டு லட்சம் வசூல் பண்ணி தந்தோம். கேயார், ஹாஸ்பிடல்ல இருந்தப்ப மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி பண்ணினது யார்னு நீங்களே அவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கங்க.

இப்படி எவ்வளவோ நல்ல விஷயங்கள் பண்ணிருக்கோம். அவர் சொல்றதுக்கு வரிக்கு வரி பதில் சொல்லி என் மரியாதையைக் குறைச்சுக்க விரும்பலை. இந்த விஷயத்தில் நாங்கள் எப்போதும் அரசுக்குப் பக்கபலமாக இருப்போம்'' என்கிறார்.

எது எப்படியோ, சினிமாவுக்கு நல்லது நடந்தால் சரி!

Share |
Previous Page Next Page HOME