பண்ணையாரும் பத்மினியும் -திரை விமர்சனம்

‘ஷார்ட் ஃபிலிம் க்ளப்’லிருந்து இன்னொரு குறும்படம் தமிழ் சினிமாவாக உருமாறி இருக்கிறது. அறிமுக இயக்குனர் எம்.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஜெயபிரகாஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது ‘பண்ணையாரும் பத்மினி’யும் படம். ஒரு ‘பத்மினி’ காரை ஹீரோவாக முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்பட்டு வரும் இப்படம் ரசிகர்களிடம் எந்தளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது?

80களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், ஒரு பத்மினி காரும் அதன் மேல் பலரும் வைத்திருக்கும் காதலும்தான் கதைக்களம்.

தற்காலிகமாக தன்னிடம் வந்து சேரும் பத்மினி காரை, தன் வீட்டில் உள்ள ஒருவர் போல் ஆசை ஆசையாக பார்துக் கொள்கிறார் பண்ணையார். அந்தக் காரை ஓட்டுவதற்காக அவரிடம் வந்து சேர்கிறார் அதே ஊரில் இருக்கும் ஒரே டிரைவரான முருகேசன் (விஜய் சேதுபதி). அந்த காருக்கு டிரைவரான பிறகு பண்ணையார் வீட்டின் பாசமும், ஊரில் மரியாதையும், கூடவே காதலும் கைகூடுகிறது டிரைவர் முருகேசனுக்கு. மொத்த ஊரும் வாய் பிளந்து பார்க்கும் அந்தக் காரின் முன்சீட்டில் உட்கார்ந்து ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசையோடு ஒரு சிறுவன் (அட்டகத்தி தினேஷ்).

இந்த மூன்று பேருக்கும் அந்த காருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை காமெடி, காதல், சென்டிமென்ட் கலந்து ரசிகர்களுக்கு ஒரு ‘ஃபீல் குட்’ படமாக கொடுக்க முனைந்திருக்கிறார்கள் ‘பண்ணையாரும் பத்மினி’யும் படக்குழுவினர்.

ஒரு காரை ஹீரோவாக முன்னிறுத்தி வந்திருக்கும் வித்தியாசமான படம், மது, புகை நெடியில்லாத ஒரு சுத்தமான கிராமத்து கதை, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய விரசமில்லாத படம் என்ற வகையில் அறிமுக இயக்குனர் எம்.அருண்குமார் பாராட்டுக்களை அள்ளுகிறார். ரசிகர்களை பத்மினி காரில் உட்கார வைத்து ‘பச்சை பசேல்’ கிராமத்தை ஒரு ரவுண்ட் சுற்றிக் காட்டியதற்காக ஒரு ஸ்பெஷல் பொக்கே கொடுக்கலாம் ‘பண்ணையாரும் பத்மினி’யும் டீமுக்கு.

முதல் பாதியில் காமெடி, காதல் என கொஞ்சம் ரிலாக்ஸாக பயணிக்கும் பண்ணையாரின் கார், இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் டிராக்கில் பயணித்து ரசிகர்களை நெகிழ வைக்கிறது. தன் திருமண நாளுக்கு மனைவி செல்லம்மாவுடன் (துளசி) காரில் செல்ல வேண்டும் என்பதற்காக பண்ணையார் கார் ஓட்டக் கத்துக் கொள்ளும் காட்சிகள் ‘கல கல’ ரகம். அதுகுறித்து பண்ணையாருக்கும் செல்லம்மாவிற்கும் நடக்கும் அன்னியோன்ய உரையாடல்களிலும் காதல் கொப்பளிக்கிறது.

பண்ணையாராக ஜெயபிரகாஷும், அவரின் மனைவி செல்லம்மாவாக துளசியும் உண்மையாகவே படத்தில் காதல் தம்பதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள். மிகையில்லாத அற்புதமான நடிப்பு. நீண்டநாள் கழித்து ஜெயபிரகாஷுக்கு சரியான தீனி கிடைத்திருக்கிறது பண்ணையார் கேரக்டர் மூலம். விஜய் சேதுபதியையும் டாமினேட் செய்து மனதை அள்ளுகிறார் மனிதர். அதேபோல் படம் முழுக்க ‘பீடை’ என்ற அடைமொழியுடன் வலம் வரும் பால சரவணனும் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

கார் டிரைவர் முருகேசனாக வரும் விஜய் சேதுபதி வழக்கம்போல் தன் நடிப்பால் கைதட்டல் வாங்குகிறார். இப்படத்திற்கு ரசிகர்களை அழைத்துவர விஜய் சேதுபதி பயன்பட்டிருக்கிறார் என்பது நிச்சயம் உண்மை. ஆனால், அந்த முருகேசன் கேரக்டர் விஜய் சேதுபதியின் கேரியருக்கு எந்தளவு பயன்படும் என்பது தெரியவில்லை. யார் வேண்டுமானாலும் செய்திருக்கக்கூடிய அந்த டிரைவர் கேரக்டருக்கு விஜய் சேதுபதியை நடிக்க வைத்தது ‘பப்ளிசிட்டி’க்காகத்தான் என்பதைத் தவிர வேறொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. விஜய் சேதுபதி படத்திற்குள் வந்துவிட்டதால் கதைக்கு தேவையே இல்லாமல் அவருக்கு காதலியாக ஐஸ்வர்யாவும் படத்தில் வந்து போயிருக்கிறார்.

பசுமையான கிராமத்தையும், சின்னஞ்சிறு பத்மினி காரையும், பண்ணையாரின் வீட்டையும், படத்தில் நடித்திருப்பவர்களின் உணர்ச்சிமிகு முகபாவங்களையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய். அதேபோல் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குட் வொர்க் ஜஸ்டின் பிரபாகரன்! ‘படம் கொஞ்சம் நீளமோ’ என்று ஏற்படும் உணர்வைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எடிட்டிங்கும் ஓகேதான்.

எல்லாம் சரியாக வந்திருந்தும் படத்தில் ‘ஏதோ’ ஒன்று நம்மோடு ஒட்டவில்லையே என்ற உணர்வு ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம் படத்தில் முக்கிய விஷயமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் காருக்கும், அதன் மேல் காதல் வைத்திருப்பவர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை சரியாகக் கையாளாததுதான். மாறி மாறி அந்தக் காரின் மேல் அனைவரும் அன்புப் பொழிய வேண்டிய அவசியத்திற்கான காட்சிகளை படத்தில் ‘மிஸ்’ செய்துவிட்டார் இயக்குனர். தங்களில் ஒருவராக நினைக்கும் அந்தக் காருக்கும் உயிரூட்டியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் நெகிழ்வைத் தந்திருக்கும் பண்ணையாரின் பத்மினி கார். மொத்தத்தில் ‘பண்ணையாரும் பத்மினி’யும் அலுப்பில்லாத பயணம்!

Share |
Previous Page Next Page HOME