'உன்னால் முடியும் தம்பி' படத்தை ரீமேக் செய்ய பாலசந்தர் மறுப்பு? அமீர்கான் தகவல்

சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவிற்காக சென்னை வந்த அமீர்கான், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரை அவருடைய வீட்டில் சென்று சந்தித்தார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசினர். அப்போது பாலசந்தரின் மிக முக்கிய படமான 'உன்னால் முடியும் தம்பி' படத்தை அமீர்கான் இந்தியில் தயாரிக்க அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு பாலசந்தர் அனுமதி கொடுக்க மறுத்ததாகவும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பாலசந்தர் இந்த படத்தை முழு திருப்தியுடன் எடுத்து முடித்ததாகவும், மீண்டும் ஒருமுறை இந்த படத்தை அந்தளவுக்கு பர்பெக்ஷனாக யாராலும் எடுக்க முடியும் என்று தாம் நம்பவில்லை என்பதால் அனுமதி கொடுக்க மறுத்ததாக கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்தியை அமீர்கான் மறுத்துள்ளார். இயக்குனர் பாலசந்தரை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்ததாகவும், அவருடைய படத்தை ரீமேக் செய்யும் ஐடியா எதுவும் இல்லை என்றும், அதுவும், 'உன்னால் முடியும் தம்பி' படத்தை மீண்டும் ஒருமுறை எடுத்து கமல்ஹாசனின் நடிப்பிற்கு இணையாக மீண்டும் ஒருமுறை யாராலும் கொண்டு வர முடியும் என தாம் நம்பவில்லை என்றும் கூறினார்.

மேலும் அந்த படத்தின் உயிர்நாடியே இசைஞானி இளையராஜா. அவர் இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது. ஒருவேளை இந்தி ரீமேக் எடுப்பதாக இருந்தால் இளையராஜா சம்மதித்தால் மட்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறினார். தற்போது அமீர்கான் நடித்துக்கொண்டிருக்கும் தூம் 3 என்ற பிரமாண்டமான படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த படம் 150 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவானது. இதில் அமீர்கான், அபிஷேக் பச்சன், காத்ரீனா கைப் நடித்துள்ளனர். இந்த படம் க்ரீஷ் 3 சாதனையை ஒரே வாரத்தில் முறியடிக்கும் என பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Share |
Previous Page Next Page HOME