தாமிரபரணி படத்திற்கு பிறகு ஹாி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் பூஜை. இதில் விஷாலுடன் முதன் முறையாக ஸ்ருதிஹாசன் ஜோடி சோ்ந்து கலக்கி இருக்கும் படம். மேலும் விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ”பூஜை”.
கூலிப்படையை நடத்திவரும் தாதா ஒருவனுக்கும், எதற்கும் துணிந்த தைரியசாலி ஹீரோவுக்கும் இடையே நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றை கலந்து சொல்லியிருப்பதே பூஜை.
கோயம்புத்தூரில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் ராதிகாவின் மகன் விஷால், பிரச்சனை ஒன்றின் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து சென்று, அவினாசி மார்க்கெட்டில் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்து வருகிறார். ஒரு சந்திப்பின்போது விஷாலுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாய் மாறுகிறது.
இன்னொருபுறம் அதே ஊரில் அறங்காவலர் பதவியில் இருந்து கொண்டே, மறைமுகமாக கூலிப்படையை நடத்தி வருகிறார் மனோஜ் திவாரி. அதோடு விஷால் குடும்பத்துக்கு சொந்தமான கோவில் நிலத்தையும் திட்டம்போட்டு பறிக்க முயல்கிறார். இதைத் தெரிந்து கொள்ளும் கோவில் நிர்வாகம் விஷாலின் சித்தப்பாவான ஜெயப்பிரகாஷை அறங்காவலர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி சொல்கிறது. இதைத் தாங்க முடியாமல் மனோஜ் திவாரியின் ஆள் ஜெயப்பிரகாஷை தாக்க, மனோஜ் திவாரியின் வீடு புகுந்து அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்கிறார் விஷால்.
இதனால் அவமானமாகும் மனோஜ் திவாரி, விஷால் குடும்பத்தில் இருப்பவர்களை ஒவ்வொருவராக கொலை செய்யப்போவதாக சவால்
விடுகிறார். இந்த சவாலை விஷால் எப்படி சமாளிக்கிறார் என்பதே ‘பூஜை’.
படத்தில் விஷால் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸ் ஹீரோவிற்கான அந்தஸ்தை அதிகப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார்.
ஸ்ருதி, திவ்யாவாக நடிப்பிலும், இளமை துடிப்பிலும், 16 அடி, இல்லை இல்லை… 32 அடி பாய்ந்திருக்கிறார். அம்மணி காட்டுவது ஓவர் கிளாமர் என்றாலும் அது ஓவராக தெரியாதது ஸ்ருதியின் ப்ளஸ்!
சூரி, பிளாக் பாண்டி இவர்கள் செய்யும் காமெடி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக சூரியின் காமெடி அருமை. ராதிகா அழகான
கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். சத்யராஜ் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று மொட்டை தலையுடன் மிரட்டுகிறார்.
ஆக்ரோஷமான காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னதாண்டவம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
படத்திற்கு கூடுதல் பலம் யுவனின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும்
மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சத்யராஜுக்கு பின்னணி இசை அருமை. ஆண்ட்ரியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார்.
ப்ரியனின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன்-டி.எஸ்.ஜாய் இருவரது படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், ‘பூஜை’க்கு மாவிலை தோரணம்
கட்டியிருக்கின்றன.
ஹரியின் எழுத்து-இயக்கத்தில், ‘பூஜை’ படம் படு ஸ்பீடாக செல்வது, பூஜை படத்திற்கு மவுஸை கூட்டியிருக்கிறது.
ஆகமொத்தத்தில், விஷால்-ஹரி கூட்டணியின் ”பூஜை” – ”ஆர்டினரி பூஜை அல்ல, அசத்தும் அதிரடி ஆயுத பூஜை!”
tags: Poojai review, poojai movie review, poojai stills, poojai new stills, பூஜை விமா்சனம், பூஜை திரைவிமா்சனம், பூஜை ஸ்டில்ஸ், தமிழ் சினிமா செய்திகள், விஷால், ஸ்ருதிஹாசன், இயக்குநா் ஹாி