சலீம் விமர்சனம் Salim Reviews

சென்னையில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் சலீம் (விஜய் ஆண்டனி) நேர்மையான இரக்க குணம் கொண்ட நல்ல மனிதர் யாருமில்லாத அனாதை, இவருக்கும் நிஷாவுக்கும் (அக்‌ஷா பர்தசனி) திருமணம் நிச்சயக்கப்படுகிறது. ஆனால் சலீம் பொறுமைசாலி, நேர்மையானவர் என்பதால் அவரின் நடவடிக்கைகள் (நம்ம ஊர் பொண்ணுகளுக்கு தான் நல்லவன்னா ஆகாதே) நிஷாவுக்கும் அதே பிரச்சனை தான் கல்யாணத்தை நிச்சயதார்த்ததோடு நிறுத்துகிறார். மருத்துவமனையில் இவரால் லாபத்தின் விகிதம் குறைவதால் வேலையை விட்டு துறத்துகிறார்கள்.

ஒரே நாளில் வேலையையும் இழந்து, திருமணம் செய்ய இருக்கும் பெண்ணையும் தான் இழந்து நிற்பதற்கு காரணம் தனது நேர்மைதான் என்பதை புரிந்து கொண்ட விஜய் ஆண்டனி, ஒரே ஒருநாள் மட்டும் தனது நேர்மையான பாதையில் இருந்து விலகி அநீதியான பாதைக்கு மாறுகிறார். ஹோட்டல் ஒன்றிற்குச் செல்லும் விஜய் ஆண்டனி மத்திய அமைச்சரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை ஹோட்டல் ரூமில் கடத்தி வைக்கிறார்.

விஜய் ஆண்டனி எதற்காக அமைச்சரின் மகனை கடத்துகிறார்..? போலீஸ் என்ன செய்யப்போகிறது..? அக்ஷாவை திருமணம் செய்து கொண்டாரா? என்பதை விறுவிறுப்போடு சொல்வதே படத்தின் மீதிக்கதை…

வழக்கமான ‘த்ரில்லர்’ கதையை, முதல்பாதியில் திரைக்கதையை மெதுவாக நகர்த்தியுள்ள, இயக்குனர் நிர்மல்குமார், இரண்டாவது பாதியில் விறுவிறுப்பாக கொடுத்துள்ளார். தன் முதல் படத்திலேயே பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்ற விதத்தில் இவரைப் பாராட்டலாம்.

விஜய் ஆன்டனி, நான் படத்தை காட்டிலும் நடிப்பில் நன்கு முன்னேறி இருக்கிறார். டாக்டர் சலீமாக அறுவை சிகிச்சை நிபுணராக அசத்தும் காட்சிகளிலும் சரி, ஏழைப் பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு காரணமான அமைச்சரின் வாரிசுகளையும், அவரது சகாக்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அசால்டாக காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் சவால் விடும் இடங்களிலும் சரி, விஜய் ஆன்டனி வெளுத்து வாங்கியிருக்கிறார். இவைகளைக் காட்டிலும் லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டுடன் வந்தாலும் கூட அலட்டும், மிரட்டும் காதலி அக்ஷாவிடம் கனிவும், பணிவும் காட்டும் இடங்களிலும் கூட அமர்க்களமாக நடித்து ஸ்கோர் அள்ளியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

நாயகி அக்ஷா பர்தாசானிக்கு அறிமுகப்படம் போன்றே தெரியவில்லை. அவருடைய கண்களே பல இடங்களில் பேசுகிறது. முதல்பாதியில் அதிக வேலையில்லை என்றாலும் இரண்டாவது பாதியில் நன்றாக நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.

மத்திய அமைச்சராக வரும் ஆர்.என்.மனோகர் பார்வையிலேயே மிரட்டுகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் சந்திரமௌலி, இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ் ஆகியோர் துடிப்பான நடிப்பால் நம் கண்முன் நிற்கிறார்கள்.

கதையை நல்ல திரில்லர் படங்களுக்கே உரிய காட்சி அமைப்புகளுடன் திரைக்கதையாக்கியிருகிறார் இயக்குனர் நிர்மல் குமார். முதல் பாதியில் திரில்லர் கதைக்கான அச்சாரத்தைப் போடும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் முழு திரில்லர் படமாக உருவெடுக்கிறது. இரண்டாம் பாதி முழுவதும் ஓட்டலைச் சுற்றி கதை நகர்ந்தாலும் எந்தவொரு காட்சியிலும் சலிப்பை ஏற்படுத்தாமல் அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு த்ரில்லிங் படத்திற்கு தேவையான பின்னணி இசையை மிகக்கச்சிதமாக அமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. குறிப்பாக ‘மஸ்காரா’ என்றப் பாடல் அருமையாக உள்ளது. மேலும் அதிகாரவர்க்கத்திற்கு சாட்டையடி கொடுக்கும் கதையும், வசனமும் படத்திற்கு கூடுதல் பலம்..

இது அறிமுகப்படம்தானா? என்ற அளவிற்கு ஒளிப்பதிவில் அசத்தியிருக்கிறார் கணேஷ் சந்திரா. பாடல் காட்சிகளில் அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் போல் காட்சி அமைத்திருக்கிறார். படத்தின் எடிட்டிங், காட்சிகளை கோர்வையாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

ஆக மொத்தத்தில் ‘சலீம்’ திரைப்படம் திக்…திக் திரில்லர் நிமிடங்களுடன்…

Tag: salim movie reviews,salim review, salim movie stills

Share |
Previous Page Next Page HOME